Saturday, June 18, 2011

அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி

இந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.

இப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.

அதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அவர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.

கணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்?

1. மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;

2. 16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;

3. வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;

4. ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;

5. வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;

6. 25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்

7. சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும்? முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.

உள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை? அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.

என்ன சூழ்ச்சி அது?

1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.

1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.

1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.

இந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.

இப்போது, ஊரகப்புறங்களில் -

1. தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;

2. திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.

மற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.

வரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.

ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.

‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ணைத் திணிப்பதற்கே பயன் படும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- வே.ஆனைமுத்து--சிந்தனையாளன்

No comments: