Friday, May 30, 2008

நாயகன் பெரியார் 10

'உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும்,
பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம்
தேடிக்கொள்!'

-பெரியார்



சில சமயங்களில் இயற்கை, மனிதனைக் காட்டிலும் அட்டகாசமான கவிதைகளை, யாருமே எதிர்பாராத வகையில் எழுதிவிடும். அப்படி அது எழுதிய ஒரு கவிதைதான், வெண்ணிறச் சிங்கமெனத் தாடியும் மீசையுமான கோலத்துடன்கூடிய ஈ.வெ.ராமசாமியாரின் பழுத்த சிந்தனையாளனுக்குரிய தோற்றம்.

ஏற்கெனவே பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாடக் காரியங்களை எல்லாம் தன் சிந்தனையைத் தடை செய்யும் முக்கிய எதிரிகளாகக் கருதி, கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவந்தவர், மலேயா பயணத்தின்போது நேரமின்மை காரணமாக முகம் மழிப்பதையும் முடி வெட்டுவதையும் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதி நிறுத்திக்கொண்டார். 'கழுதை அதுபாட்டுக்கு வளரட்டும்.

நேரத்துக்கு நேரம், துட்டுக்கு துட்டுன்னு ரெண்டும் மிச்சம்' என்பது அவர் கணக்கு.



மலேயா பயணம் முடிந்து இந்தியா திரும்பும் பயணத்தில், கப்பல் நாகைத் துறைமுகத்தை வந்தடைந்தது. ராமசாமியார் கப்ப லிலிருந்து வெளிப்பட்டபோது கூடியிருந்த தொண்டர்கள் அதிசயித்தனர். அலை கடலென அவரது தலைக்குப் பின்னால் புரளும் வெண்ணிற முடியும், அருவியென முகத்தில் சரிந்து தொங்கும் தும்பை நிற மீசையும் தாடியும் அவரது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியிருந்தன. தாங்கள் புகைப்படங்களில் கண்டும் கேட்டும் அறிந்த உலகச் சிந்தனையாளர்களின் முகத் தோற்றத்தைப் போல அவரது முகம் மாறியிருப்பதைக் கண்டு தொண்டர்கள் வியந்தனர்.

மலேயா பயணம் எப்படி அவரது உருவத்தை மாற்றியிருந்ததோ, அது போல அடுத்த வருடமே அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணம், அவரது உள்ளத்தை மாற்றியது. அங்கே வீசிய சோஷலிசக் காற்று அவருக்குள்ளிருந்த சமதர்மக் கொடியை மேலும் பட்டொளி வீசிப் படபடக்கவைத்தது. நவம்பர் 8, 1932ல் ரஷ்யாவிலிருந்து கப்பலில் திரும்பிய அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கால் வைத்த அன்றே, அங்கு நடந்த வரவேற்புக் கூட்டத்தில், இனி தன்னை அனைவரும் தோழர் என விளிக்கும்படி உத்தரவிட்டார். தனது சகாக்களும் கம்யூனிச சிந்தாந்தத்தில் பற்றுக்கொண்டவர்களுமான தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரை குடியரசு வார ஏட்டில் தொடர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களை எழுதும்படி சொன்னார்.

அக்காலத்தில், ஆங்கில அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் என யாராவது வாய் தவறிச் சொன்னாலே, கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். இந்தச் சூழலில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் கர்ப்பப்பையாகக் கருதக்கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலாக தமிழில் வெளியிட்டார் தோழர் ராமசாமி. அடுத்ததாக அவர்கள் வெளியிட்ட புத்தகத் தின் பெயர், 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'எழுதியவர் பகத்சிங்.

விளைவு, ஒரு நாள் தடதடவென அச்சகத்தினுள் நுழைந்த போலீஸார், ராமசாமியாரின் சகோதரரும் அச்சக உரிமையாளருமான ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், அந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் ஜீவானந்தத்தையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் மன் னிப்புக் கடிதம் தரக்கோரி நிர்பந்திக்கப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.



குண்டு... தன் மனைவி நாகம்மையைத் தோழர் ராமசாமி செல்லமாக அழைப்பது இப்படித்தான். ஈரோட்டில் குடியரசு ஊழியர்களுக்குத் தனது கையாலேயே நாகம்மை மதிய உணவு பரிமாறும்போது, தன் கணவரை அங்கே அனுமதிப்பதில்லை. காரணம், அவர் அங்கே வந்தால், ''ஏய் குண்டு... எதுக்கு இத்தனை காய் போட்டுச் சமைக்கிறே? கொஞ்சம் சிக்கனமா கறி இல்லாம சமைக்க வேண்டியதுதான?'' என்று கணக்கு பார்க்கத் துவங்கிவிடுவார். ஆனாலும், நாகம்மை அதை ஒருபோதும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு தன் அன்பையும் சேர்த்துப் பரிமாறுவார். அதனால், நாகம்மை யாரின் திடீர் மரணம் தொண் டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் நாகம்மையார் பேசத் துவங்கியபோது, ராமசாமியார் தன்னைத் 'தோழர் ராமசாமி' என அழைக்கச் சொல்லி வற்புறுத்த, அம்மையாரோ கூச்சப்பட்டு மறுத்தார். ஆனால், ராமசாமியார் விடவில்லை. இறுதியில் தன் மனைவி தன்னை 'தோழர் ராமசாமி அவர்களே' என அழைப் பதைக் கேட்டு நெகிழ்ந்தார்.

இப்படியாக எந்தச் சமரசமும் இல்லாமல் பொதுவாழ்வில் தன்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட தன் மனைவி இறந்துகிடக்கும் நிலையிலும் சலனம் இல்லாமல் இருந்தார் ராமசாமியார். கையில் தடியை ஊன்றியபடி வாசலில் நின்றுகொண்டு, ஒப்பாரி பாடி அழுதபடி வந்த பெண்களிடம், ''இங்கே பாருங்கள்... உள்ளே போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணுவதாக அபிப்ராயம் இருந் தால், இப்படியே திரும்பிச் செல்லுங்கள்'' என்றார் திட்ட வட்டமாக. மேலும் அன்று இரவே புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று மறுநாள் தடை உத்தரவை மீறி ஒரு கிறிஸ்துவத் திருமணத்தை நடத்திவைத்தார்.

தனது தாயாரான சின்னத்தாயம்மாள் இறந்தபோதும் தன் மேல் கவிய வந்த துக்கத்தை ஈயை விரட்டுவது போல விரட்டியடித்தார். கதியற்றுக்கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் துயரங்களைத் துடைக்கும் பொறுப்பு தன் முன் இருக்க, தனது சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது அயோக்கியத்தனமானது என்பதுதான் அவரது செயல்களுக்குப் பின் னால் இருந்த ஒரே காரணம்.

இப்படியான இரண்டு இழப்பு களுக்கிடையே அவரது வாழ்வில் முக்கியமானதொரு வரவும் நிகழ்ந்தது. திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டுக்குச் சென்றபோது, முதல்முறையாக ஓர் இளைஞரைப் பார்த்தார். உலகம் அதுவரைகேட்டிராத புதிய தமிழ், அந்தஇளைஞரிடமிருந்து அருவியாகக் கொட்டியது. பார்த்த, கேட்ட கணத்தி லேயே தன் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் அந்தஇளை ஞரைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். உண்மையில் அப்போது, மேடையில் உரைநிகழ்த்திக்கொண்டு இருந்த அந்த இளைஞனுக்கே... தனது வாழ்க்கை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால வரலாறே அந்த மேடையில் தீர்மானிக்கப்படுகிற ரகசியம் தெரியாது. அந்த இளைஞர்... தமிழக மக்களால் பிற்பாடு அன்புடன் 'அறிஞர் அண்ணா' என அழைக் கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.

அண்ணாவின் வரவு, சுயமரியாதை இயக்கத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. தகிக்கும் வெப்பக் காட்டாறாக ஒருபுறம் ராமசாமியார் தன் சிந்தனைச் செறிவால் மக்களின் மூடத்தனங் களுக்குச் சாட்டையடி கொடுக்க, இன்னொருபுறம் குளிர்ந்த தென்றலாய் அண்ணா தன் தமிழால் கேட்போர் நெஞ்சங்களைச் சுண்டி இழுத்து வசப்படுத்திவந்தார். அதுவரை சம்ஸ்கிருதக் கலப்பு காரணமாக மக்களின் மனங்களிலே மரத்துக்கிடந்த மொழி உணர்வு, தன் புதிய நீரோட்டத்தை அண்ணாவின் துள்ளு தமிழ்ப் பேச்சில் கண்டுபிடித்தது. தமிழில் புலமையும் ஆற்றலும் மிக்க புதிய இளைஞர் கூட்டம்ஒன்று ஆர்த்தெழுந்து ராம சாமியாரின் சுயமரியாதை இயக்கப் படையில் அணி வகுத்து நின்றது. மொழி காரணமாக, தமிழரிடத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி தோன்றியிருந்தது. மறைமலை அடிகளும் திரு.வி.கவும் முன்பே பாதை போட்டுக் கொடுத்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தில்தான் அது முழுமையான அளவில் படித்த மக்களின் மனதிலே உணர்வாக உருத்திரண்டது.

1937ல் நடைபெற்ற தேர் தலில் வெற்றிபெற்று காங் கிரஸ் சார்பில் முதல் அமைச் சராகப் பதவி ஏற்றதும், முதல் காரியமாகப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடத் திட்டமாக்க ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி. ராஜாஜியின் இந்தத் திட்டத்துக்குப் பின் உள்ள சதியை உணர்ந்துகொண்ட ராமசாமியார், துடித்து எழுந்தார்.

1938 செப்டம்பரில் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர். 'தமிழ்நாடு, தமிழருக்கே!' என இச்சமயத்தில்தான் முதன் முறையாக அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முழுக்க இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசாங்கம் அடக்குமுறையை ஏவிவிட்டது. பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். ராமசாமியார் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, முதலில் சென்னைச் சிறையிலும் பின்னர் பெல்லாரி சிறைக்குமாக மாற்றப்பட்டார்.

சென்னையில் அதே வருடம் நவம்பர் மாதம் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற தமிழகப் பெண்கள் மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி தோழர் ராமசாமியாருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது.

அன்று அவர்கள் வழங்கிய 'பெரியார்' எனும் சொல், காலத்தில் நிலைத்து நின்று தனக்கெனத் தனிப் புகழைத் தேடிக்கொண்டது!



-சரித்திரம் தொடரும்

No comments: