Friday, April 18, 2008

-பெரியார் 7

ஆழ்ந்து யோசித்தால், காதலின் சத்தற்ற
தன்மை, பொருளற்ற தன்மை,
உண்மையற்ற தன்மை, நித்யமற்ற தன்மை
அதைப் பிரமாதப்படுத்தும் அசட்டுத் தன்மை
ஆகியவை எளிதில் விளங்கிவிடும்!

-பெரியார்



தொண்டுள்ளம் என்பது மனிதருள் அரிதாகக் காணப்படும் ஒரு விஷயம். அப்படியே சிலரிடத்தில் அது காணப்பட்டாலும் சோறு, தண்ணீர், தூக்கம் போல் அது அவர்களது வாழ்வின் மற்றொரு காரியம். ஆனால், ராமசாமியாருக்கோ அது ரத்தமும் சதையுமாக பிறக்கும்போதே உடலோடு ஒட்டிப் பிறந்த ஒன்று. அதனால்தான் ராஜாஜி மூலமாக காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் கேள்விப்பட்ட உடனேயே அவரது உள்ளம் நெருப்பலைகளாகப் பொங்கிப் பிரவகித்தன. காந்தி அவருக்குள் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். அதுவரை தன்னைப் பீடித்து வந்த சிகரெட், புகையிலை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஒரே நாளில் நிரந்தர முடிவு கட்டினார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ராஜாஜி சேலம் நகர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், ராமசாமியாரும் தனது ஈரோடு நகர் மன்றத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். அப்போது தீவிரமாக இருந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் கோர்ட் நடவடிக்கை மூலம் தனக்கு வர வேண்டியிருந்த ரூபாய் 50,000 பணத்தையும் நிராகரித்தார். தான் வகித்து வந்த 29 முக்கியப் பதவிகளையும் ஒரே நாளில் துறந்து, கதர் வேட்டி சட்டை, கதர் குல்லா, தோளில் பை எனச் சாதாரணத் தொண்டனாக மாறி ஈரோட்டையே அதிசயிக்கவைத்தார்.

மனைவி நாகம்மையை அழைத்தார்.

வீட்டில், பெட்டியில் அடுக்கடுக்காக இருந்த பட்டுப் புடவைகள், வேட்டி சட்டைகள் அனைத்தையும் சேகரிக்கச் சொன்னார். அப்போது நாடகத்துக்காக ஈரோட்டில் முகாம் போட்டு இருந்த அவ்வை சண்முகம், டி.கே.பகவதி, ஆகியோரை வரவழைத்து, ''இனி இந்தத் துணிகள் உங்களது நாடகத்துக்குப் பயன்படட்டும்'' எனத் துணிகள் அனைத்தையும் கொடுத்ததோடு, ''இனி, இந்த வீட்டில் கதராடை மட்டும்தான் உடுத்த வேண்டும்'' என உத்தரவிட்டார். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் ஒட்டுமொத்த குடும்பமும் ராமசாமியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு கதராடைக்கு மாறியது.

ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எத்தனை தடை வந்தாலும் அதன் இறுதி எல்லை வரை தொட்டுப் பார்த்துவிடும் சுபாவமும், அதன் பொருட்டு எதனையும் இழக்கும் துணிச்சலும் இயல்பாகக்கொண்டு இருந்த ராமசாமியாரின் மூர்க்கத்தைக் கண்டு காங்கிரஸார் மலைத்து நின்றனர். ஒரு தோளில் ராட்டையும் மற்றொரு தோளில் கதர் துணி மூட்டையுமாக வீதியில் இறங்கி, ஊர் ஊராகக் கதர் வியாபாரம் செய்ய அவர் புறப்பட்டபோது, அதுவரை அவரைச் சுற்றி வந்து வயிறு வளர்த்த கும்பல்கள் அதிர்ந்தன. 'உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கும்போது, இந்த மனிதனுக்கு இது என்ன வேண்டாத வேலை?' எனப் புலம்பினர். நட்பும் உறவும் எச்சரித்தன. ஆனால், ராமசாமியார் அந்தக் கூச்சல்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துக்கொண்டு கதர் பிரசாரத்தில் அவர் ஈடுபட்ட தீவிரத்தைக் கண்டு ராஜாஜியே ஆடிப் போனார்.

பொதுக் கூட்டங்களில் ராமசாமியாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல்கள் கேட்டன. இதுநாள் வரை தொண்டைத் தண்ணி வறள தாங்கள் மணிக்கணக்கில் மைக்கில் பேசியும் மசியாத கூட்டம், ராமசாமியாரின் பேச்சில் மகுடிப் பாம்பாய் மயங்கி, கதர் சட்டைக்கு மாறுவது கண்டு ஆச்சர்யப்பட்டனர். இத்தனைக்கும் அவரது பேச்சில் மணிப்பிரவாள மொழி நடை கிடையாது. சாக்ரடீஸ், பிளாட்டோ என மிரளவைக்கும் பிரமாண்டங்கள் துளியும் இல்லை. ஆனால், 'உண்மை' இருந்தது. அந்த ஒன்றுதான் பாமரர்களையும் அவரை நோக்கிச் சுண்டி இழுத்தது. தீண்டாமை, மதுவிலக்கு, கதர் என எதைப் பற்றி அவர் பேசினாலும் பேச்சில் நெருப்புத் துண்டங்கள் தெறித்து விழுந்தன. கேட்போரின் மடமையை அவை அடித்து நொறுக்கி அறிவின் பெரு வெளிச்சத்தையும் தேசப் பற்றையும் ஊட்டி வளர்த்தன. ராமசாமியாரின் இந்த அபாரப் பேச்சுத் திறமையால் தமிழ்நாட்டில் ஆமையாக இருந்த காங்கிரஸ், சிங்கமாக வீறுகொண்டு எழுந்தது. எங்கு கூட்டம் நடத்தினாலும் 'முதலில் ராமசாமியாரைக் கூப்பிடுங்கள். அவர் பேரைச் சொன்னால்தான் கூட்டமே கூடுகிறது' எனுமளவுக்கு அவரது புகழ் தமிழ்நாடு முழுக்கப் பரவியது. ராமசாமியாரின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் அவருக்குப் பின்னிருந்து ராஜாஜி முழு முனைப்பாகச் செயல்பட்டார். அதற்குக் காரணமும் இருந்தது.

அப்போதைய அரசியல் சூழலில் தன் முக்கிய எதிரிகளான அன்னிபெசன்ட், தீரர் சத்தியமூர்த்தி, ஆகியோரை வீழ்த்த முடியாமல் ராஜாஜி திணறிக்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ராமசாமியாரின் வளர்ச்சி அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இதன் விளைவாகத்தான் திருச்செங்கோட்டில் தன்னால் துவக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை ராமசாமியாரின் கைகளால் திறக்கச் செய்தார். தன் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு காந்தி வருகை தந்தபோது, அப்படியே ஈரோட்டில் ராமசாமியாரின் வீட்டுக்கும் அவரை அழைத்துச் சென்றார் ராஜாஜி. அங்கே கள்ளுக் கடை மறியல் குறித்த உரையாடலின்போது ராமசாமியாரிடம் காணப்பட்ட செயல் தீவிரம் காந்தியை ஆச்சர்யப்படுத்தியது. தனது குடும்பத்துப் பெண்களை வீட்டில் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு பெரும்பாலான தலைவர்கள் மேடைகளில் வீராவேசம் முழங்கி வந்த காலத்தில், தனது மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் களத்தில் இறக்கிப் போராடவைத்த ராமசாமியாரின் துணிச்சல் காந்தியை மலைக்க வைத்தது.

1921 நவம்பரில் கள்ளுக்கடை மறியல் ஈரோட்டில் பொறி பறந்தது. எதைச் செய்தாலும் முதலில் அதைத் தன்னிடத்திலிருந்து துவங்கும் அருங்குணத்தைப் பெற்றிருந்த ராமசாமியார் சேலம் தாதம் பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துவிட்டு போராட்டக் களத்தில் குதிக்க, ஆங்கில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.



ராமசாமியார் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை. போராட்டம் நின்றுவிட்டது என்ற நினைப்பில் இருந்த போலீஸாருக்கு நாகம்மை, கண்ணம்மாள் என இரண்டு வீர மங்கைகள் இன்னும் களத்திலிருப்பது தெரியாது. அவர்களுக்குப் பின்னால் பெண்கள் அணி அணியாக வீதியில் இறங்கினர். கிட்டத் தட்ட 10,000க்கும் அதிகமானோர் தடையை மீறி தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

'நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது' என ஈரோட்டிலிருந்து சென்னைக்குத் தந்தி பறந்தது. அதைக் கண்டு பயந்த அரசு உடனடியாக 144 தடை உத்தரவை நீக்கியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கள்ளுக் கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசாங்கம் ,காந்தியிடம் கோரிக்கை வைத்தது. 'அது என்னிடத்தில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்!' என்று காந்தி கூறுமளவுக்கு, நாகம்மை கண்ணம்மாள் இருவரின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

இந்த நேரத்தில் காங்கிரசுக்குள் சாதித் துவேஷங்கள் தீவிரமாக இருந்தன. ஒருபக்கம் மேடையில் தீண்டாமைக்கு எதிராக ஆவேச கோஷங்கள். மறுபக்கம் மாநாடுகளில் பிராமணர்களுக்கெனத் தனிப் பந்தி. உள்ளம் குமுறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக பலர் புழுங்கித் தவித்தனர். இந்த சமயத்தில்தான் ராமசாமியார் எதிர்பார்த்த திருப்பூர் மாநாடு வந்தது. மாநாட்டில் தனக்கு முன்பு வாக்கு கொடுத்தது போல, பிராமணர் அல்லாதவருக்கு 50 சதவிகிதம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ராஜாஜி முன்மொழிந்து செயலாக்கிவிடுவார் என ராம சாமியார் நம்பினார்.

ஆனால், சரித்திரச் சக்கரம்?



-சரித்திரம் தொடரும்

No comments: