Friday, April 18, 2008

பெரியார் 2

தீர்க்கதரிசனம்!

'இனி வரும் நாளில் கம்பியில்லாத் தந்தி சாதனம்
ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்!'

பெரியார்

வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம். அதன் மிகச் சிறந்த வகுப்பே பால்ய காலம்தான்!

இப்பருவத்தில் நம் மனம் எதிர்கொள்ளும் அனுபவங்களும், அதன் தொடர்பாக உண்டாகும் ஏக்கங்களும், உணர்வுத் தாக்கங்களும்தான் பிற்காலத்தில் ஒரு பிரமாண்ட கட்டடத்தைத் தீர்மானிக்கும் கான்க்ரீட் கம்பிகளாக நீண்டு, நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வடிவமைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. இயல்பாக எல்லாக் குழந்தைகளுக்கும் ஏழு வயது வரை கிடைக்கக்கூடிய தந்தையின் அரவணைப்பும், தாயின் பாசமும், பின்னாளில் 'பெரியார்' என அனைவராலும் கொண்டாடப்பட்ட அன்றைய சிறுவன் ராமசாமிக்குக் கிடைக்கவில்லை.

மண்டிக்கடை வெங்கட்ட நாயக்கர் எனும் ஓரளவு வசதியான தந்தைக்குப் பிறந்தும், பசியும் பட்டினியுமாக வளர்ப்புத் தாயின் வீட்டில் வளர்ந்த அவரது பிஞ்சு மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டதோ, யாருக்குத் தெரியும்? ஆனால், வயிற்றுக்குத்தான் வாழ்க்கை வஞ்சனை செய்ததே தவிர, மனசுக்குக் கடுகளவும் குறை வைக்கவில்லை. வளர்ப்புத் தாயின் அநியாய செல்லம், கட்டுப்பாடில்லாத துணிச்சலையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தது. இதனாலேயே ராமசாமியின் பேச்சிலும் செயலிலும் எக்கச்சக்கமான துடுக்குத்தனம்! வீட்டுத் திண்ணையில் ராமசாமி காலாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை தூரத்தில் பார்த்துவிட்டாலே போதும்... அந்தத் தெரு வழியாக குடுமியும் குடையுமாக நடந்துவரும் பெரிசு கள் வழியில் ஏதேனும் சந்து பொந்து தென்படாதா என வேட் டியை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஓடத்துவங்கிவிடுவர். 'சரி, வீட்டில் இருந்தால்தானே வம்பு! திண் ணைப் பள்ளிக்காவது போகட்டும்' எனத் தன் மகனை அந்த வளர்ப்புத் தாய் அனுப்பி வைக்க, அங்கேயும் கேலி, கிண்டல், வேட்டி அவிழ்ப்பு, அட்டகாசம்! வாத்தியார் எதையெல்லாம் செய்யாதே எனச் சொல்கிறாரோ அதை மறுவிநாடி செய்துவிட்டுத்தான் மறுவேலை!



இப்படியாக ராமசாமி வறுமையிலும் 'செம்மையாய்' காட்டுச்செடியாக வளர்ந்துகொண்டு இருந்த சமயத்தில், அங்கே மண்டி வெங்கட்ட நாயக்கரின் வாழ்க்கை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. வியாபாரத்தில் அவர் தொட்ட உப்பு, புளி, மிளகாய் எல்லாம் தங்கமாக மாறி, சின்னத்தாயம்மாளின் கழுத்தையும் கைகளையும் இடுப்பையும் அட்டிகை யாகவும் வளையல்களாகவும் ஒட்டியாணமாகவும் அலங்கரித்தன. ஏற்கெனவே வைணவ ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் ஊறித்திளைத்த சின்னத்தாயம் மாளுக்கு இப்போது சொல்லவா வேணும்? வீட்டில் தினசரி பூஜைதான்... புனஸ்காரங்கள்தான்! பிராமணர்கள் கூட்டமாக வருவதும், அவர்களை வரவேற்று உபசரித்து, தம்பதி சகித மாய் சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்து வணங்கி, சேவை செய்து, அதனாலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு மகிழ்வதுமே வழக்கமாகிவிட்டிருந்தது. இத்தருணத்தில்தான் சின்னத் தாயம்மாளுக்கு தான் தத்துக் கொடுத்த இளையமகன் ராமசாமி பற்றி ஞாபகம் வந்திருக்கிறது. 'நமக்குதான் இப்போது வசதி வந்துவிட்டதே! சிறியவன் ராமசாமியை அந்த விதவைத் தாயிடமிருந்து அழைத்துக்கொண்டு வந்து விடுங்கள். நாமே வளர்ப்போம்' என்று சொல்ல, மறுபேச்சில்லாமல் புறப்பட்டவர்தான் வெங்கட்ட நாயக் கர்.

பேச்சுத் துணைக்குக்கூட ஆளின்றி தனிமரமாகவே வாழ்ந்து வந்த அந்த விதவைத் தாயின் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு ஓரளவுக்காவது அர்த் தம் இருந்திருக்குமானால், அது ராமசாமி எனும் குழந்தை வந்த பிறகுதான். அவன் சிறுவனாக வளர்ந்து பல சேட்டைகள் செய் தாலும், அவை அனைத்தையும் தன் வறுமையையும் மறந்து ரசித்தார். அதனால்தான் வெங்கட்ட நாயக்கர் தன் வீட்டு முன் வந்து நின்றபோது அவருக்கு திக்கென்றிருந்தது. நாயக்கர் ஒன்பது வயது ராமசாமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்தார்.ஆனால், அந்த விதவைத் தாயின் வேதனையைப் பொருட் படுத்துகிற மனநிலையில் வெங்கட்ட நாயக்கரும் இல்லை; சிறுவனான ராமசாமிக்கும் அதைப் புரிந்துகொள்ளும் வயசு இல்லை. ஈரோட்டில் தனது பணக்கார வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான், ஒரு அந்நியத் தன்மையை ராமசாமியால் உணரமுடிந்தது. சின்னத்தாயம்மாள் மகனிடம் என்னதான் பாசத்தைக் கொட்டியபோதும், ராமசாமியால் அதனை ஏற்கமுடியவில்லை. நன்கு உரமேறி வளர்ந்து வரும் ஒரு மிளகாய்ச் செடியைப் பிடுங்கி, அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு வகை மண்ணில் நடும்போது, அந்தச் செடியின் வேர்கள் படும் வேதனை மனிதர்களின் அறிவுக்கு எட்டுவதில்லை. ராமசாமிக்கும் இந்தப் புதிய வாழ்க்கை அப்படியாகத்தான் இருந்தது. என்னதான் அந்த விதவைத் தாயின் வீட்டில் வறுமை மண்டிக் கிடந்தாலும், அங்கே ஒரு சுதந்திரம் இருந்தது. காலையில் எழுந்தவுடன் குளிக்கவேண்டும், பல் துலக்கவேண்டும் போன்ற கட்டாயங்களோ கட்டளைகளோ அங்கே இல்லை. இங்கே எல்லாமே தலைகீழ்! காலையில் விடிந்தும் விடியாததுமாக சின்னத்தாயம்மாள் தலைக்குக் குளித்துவிட்டு, பூஜை அறையில் சாம்பிராணி புகை போட்டு மணி அடிப்ப தும், பீரோவில் இருக்கும் நகைகளை அள்ளி உடம்பு முழுக்க மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துபோகும் சாமியார்களின் காலில் விழுந்து வணங்குவதும், ராமசாமிக்கு செயற்கையாகவும், மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத அநாவசிய, அர்த்தமற்ற காரியங்களாகவும் தோன்றின. கிராமத்தில் சட்டை இல்லாமல், குடிக்கக் கஞ்சி இல்லாமல், தெருவில் கிடப்பதைப் பொறுக்கித் தின்று, மரம் செடி கொடிகளுடன் காடு மேடு கம்மாங்கரைகளில் இஷ்டம் போல ஆடித் திரிந்த வாழ்வில் ஓர் உண்மை இருந்தாற்போல் சிறுவன் ராமசாமிக்குப்பட்டது. இதனாலேயே தன் தாயாரான சின்னத்தாயம்மாள் செய்யும் எல்லாக் காரியங்களையும் கேள்வி கேட்கத் துவங்கினான். இதை எதற்குச் செய்கிறாய், அதனால் என்ன பலன், ஏன் வெளியாள் வந்து போனதும் வீடு முழுக்கத் தண்ணீர் தெளிக்கிறாய், ஏன் அவர்கள் வந்ததும் ஓடிப்போய் காலில் விழுகிறாய்..? கேள்விகள்... கேள்விகள்..!

'அவங்கெல்லாம் சாமிடா! அப்படியெல்லாம் பேசக் கூடாது!'

'அப்படியா? அப்படின்னா பூஜை அறையில போட்டாவுக்குள்ள இருக்கிற சாமியெல்லாம், முன்னாடி வெச்சிருக்கிற சோத்தைச் சாப்பிட மாட்டேங்குது! இந்த சாமிங்க மட்டும் சம்மணம் போட்டு ஒரு வெட்டு வெட்டுதே, அது எப்படி?'

இது மாதிரியான எடக்குமடக்கான கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாமல் சின்னத் தாயம்மாள் திண்டாடுவதைப் பார்க்கப் பார்க்க ராமசாமிக்கு குஷியாக இருக்கும். அதோடு நில்லாமல், வீட்டுக்கு வரும் பெரிய மனிதர்களிடமும், பிராமணர்களிடமும் ராமசாமி ஏடா கூடமான கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவான்.

'அய்யா! எங்க அப்பா வெங்கட்டா ஏன் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கலை?'

'அடப்பாவி! பொண்டாட்டி உசுரோட இருக்கும்போது இன்னொரு பொண்டாட்டியா? அது மகா பாவம்டா!'

'அப்படின்னா, போட்டாவுல இருக்கிற சாமியும் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு பக்கமும் நிறுத்திக்கிட்டு அதே பாவத்தைதானே செய்யுது?! அப்புறம் எதுக்கு நாம அதை வுழுந்து வுழுந்து கும்புடணும்?'

'நாயக்கர் மவனாச்சேனு பார்த்தேன். இல்ல, அங்கேயே நாலு சாத்து சாத்தியிருப்பேன். முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன கேள்வி கேக்குது பாத்தீங்களா?' எனப் பொருமிக்கொண்டே பெரிசுகள் நாயக்கர் வீட்டைவிட்டு வேகமாக வெளியேறுவது வாடிக்கையானது!

இதனிடையே சின்னத்தாயம்மாளுக்கு பொன்னுத்தாய், கண்ணம்மாள் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், ராமசாமியின் மேல் பாசம் குறையவில்லை. என்னதான் குழந்தை துடுக்குத்தனமாகப் பேசினாலும், வயது ஏற ஏற எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தார்.

உண்மையில், வயது ஏற ஏற அவர் சரியாகவேதான் வளர்ந்தார். ஆனால், மற்றவர்கள்தான் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர்.

இங்கேயும், 'வீட்டிலிருந்தால்தானே வம்பளப்பு! பள்ளி சென்றால் ஒழுங்காகிவிடுவான்' எனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். இம்முறை ஆங்கிலப் படிப்பு. ஆனால், குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் பள்ளிக்கூடத்தால், ராமசாமியின் குண விசேஷங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் ஒரு சமூகத்துக்கே அறிவொளி வழங்கப்போகும் மாணவனை நாம் வதைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாமல், வதைத்து எடுத்தனர். ஒரு கட்டத்தில், ராமசாமியின் கை கால்களில் விலங்கும் மரக்கட்டையும் போட்டுப் பூட்டி, வகுப்பறையில் உட்காரவைக்கும் அளவுக்குப் போய்விட்டது. அது உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கும் மாணவனுக்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவு அல்ல. கெட்டித்துப் போன ஒரு சமூகத்துக்கும் அதன் மடத்தனத்தை அடித்து நொறுக்கவிருக்கும் கலகக்காரனுக்கும் இடையில் பின்னாளில் நிகழவிருக்கும் போரின் முதல் பேரிகை அது!



-(சரித்திரம் தொடரும்)

thanks to vikatan.om ajayan bala

No comments: