Saturday, June 03, 2006

அரபு நாடுகளில் இருக்கும் தமிழ்சங்கங்களும் தமிழும்

. சில நாட்களுக்கு முன்னால் நமது பொதிகை தொலைக்காட்சியில் கல்ப் ஏசியா விஷன் தயாரிப்பில் ஒளிபரப்பப் பட்ட சில பட்டி மன்றங்களின் பேச்சை "பார்க்க நேர்ந்தது". ஆம் அவை பட்டி மன்றங்கள் என்ற பெயரில் பழைய கடி துணுக்குகளையும் சில சொந்த அனுபவங்களையும் கொண்டவை. அதிலும் இந்த பெண்கள் பேசுவது மிகவும் கேலிக்குள்ளாகும் வகையில் தலைப்புக்கும் அவர்கள் பேசுவதற்கும் துளிகூட தொடர்பின்றி.
அட அவர்களாவது பரவாயில்லை. ஒருவர் பேசினார்.அவர் ஏதோ அனுராதா ரமணனின் பக்கத்துவீட்டுக்காரர் போல் இருந்தது. பேச்சில் இல்லை கண்ணத்திலேயே கைவைத்திருந்தார். சரி இவர் ஏதோ பேசுவார் என்று பார்த்தால் அவரும் சொந்த கதைதான். தலைப்பு என்ன தெரியுமா?. அதே தான். வெளிநாட்டு வாழ்க்கையில் பெற்றது என்ன இழந்தது என்ன? சரி இதுக்கு சொந்த கதைய சொல்லாமன்னு நீங்க கேட்பது தெரிகிறது, விஷயத்திற்க்கு வருவோம்.
இவர்கள் பேசியது சொந்த கதையென்றால் சரி கற்றதும் பெற்றதும் என்று சொல்லலாம் சொந்தக்காரர்களின் கதையல்லவா பேசுகிறார் கள். இதில் இடையிடையே நடுவர் அவர்களே.... எனது வாதம் என்னவென்றால்....பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு இது பட்டிமன்றம் என தெரியவேணுமாம். எனக்கு எதிரனியில் இருக்கும் சோ அன்ட் சோ அவர்களே. அண்ணா மாமா ... இந்த தரத்தில் இருக்கும் பட்டிமன்றத்திற்கு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை " செனார்ட் வாட்சுகள்..... மொலினாவுக்கு வாங்க " விளம்பரங்கள் வேறு.
ஆனாலும் சில நேரங்களில் நல்ல விதமான கருத்தும் முன்வைக்க படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர்களின் தமிழ்க்கொலை தாங்கமுடியாமல் போகிறது. தமில்னாட்டுள..... உளகம்பூறா என்னய்யா தமிழ் இது?இதை விட இவர்கள் படுத்தும் ரவுசு இருக்கிறது. அதாவது ஒருத்தர் சொல்றார்: என்னய்யா இது நாடு இங்க மனுசன் இருப்பானா? இல்ல மனுசன் இருப்பானான்னு கேக்குறன்... ஒரே மணல் ஒரே கட்டடம் இது காண்கிரீட் காடுய்யா" இதில் என்ன தவறு என்கிறீர்களா? அத சொன்ன திருவாளர் இந்த மணல்ல்லதான் இருவது வருஷமா குப்ப கொட்றாராம்... இதையும் அவரே சொல்றாரு. அட வந்து ரெண்டு வருஷமாவுது இனி ஊருக்கு போனா வரமாட்டாருன்னு பாத்தா திருப்பி திருப்பி வந்திருக்கார். இதுல இந்த நாட்டுமேல கிண்டல் வேற.
அதுக்காக அவர் சொன்னது தவறுன்னு சொல்லல. அதான் மணலாச்சே ஊருபாத்து போகவேண்டியது தான?. இது போன்ற பட்டிமன்றம் எந்தவிதத்தில் தமிழை வளர்க்க உதவும் என தெரியவில்லை. நம்ம நாட்டு பட்டி மன்ற லியோனி மாறி ஏதாவது பாட்டு கீட்டு பாடி "தமிழ்ச் சேவ ?" செஞ்சாலும் பரவால்ல. நீங்க பேசி கொல்றீங்களே ?. அதை தமிழ்ச்சங்கம் என சொல்வதைத்தான் என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை.
இங்கே இருக்கும் சில இலங்கை தமிழர்கள் சக்தி என்றபெயரில் வானொலி நடத்துகிறார்கள். அதிலும் நம்மாள் போனப்போட்டு " எனக்கு கில்லில இருந்து அப்பிடி போடு போடுங்கரான். " அதிலும் துபாயில் சில நேரங்களில் மனிதன் செத்து சுண்ணாம்பாகிவிடுவான். வெயில்தான். அந்தமாதிரி நாள்களில் அஜ்மான் போன்ற பிரீ சோன் இடங்களில் சிறிது தள்ளாட்டத்துடன் செல்லிடப் பேசியில் பேசும் அன்பர்களின் பேச்சு அத்தனை தெளிவாக இருக்கிறது. ஒருமுறை சக்தியில் ஒரு நேயர் நேயர் நேரத்தில்( அதாவது தினசரி ஒரு தலைப்பு கவிதை, கேள்வி இப்படி. அன்று:
நேயர் : அலோ
ரேடியோ : அலோ சொல்லுங்க இது உங்கள் சக்தி எப்.எம்
நேயர் : சத்தியா?
ரேடியோ : ஆம் நேயரே உங்கள் கவிதை என்ன சொல்லுங்கள்?
நேயர் : நேயர்ரா? அதுயாரு?
ரேடியோ : மன்னிக்கவும் நீங்கள் எங்கிருந்து அழைக்கிறீர்கள்?
நேயர் : அஜ்மானுலருந்து....... நான்....
ரேடியோ : டொக்.....கிர் கிர் சரி அடுத்த நேயர் காத்திருக்கிறார் அவரிடம் பேசுவோம்....
இந்தமாதிரி சேவைகளும் சிலர் செய்வதுண்டு. அட இது பரவாயில்லை அவரின் தொலைபேசி பணம் அவருடையது. ஆனால் இதை கேட்கும் மற்ற மாநிலத்தார் என்ன நினைப்பர் ... இதை சொல்ல காரணம் இருக்கிறது தமிழை இந்த சங்கம் வளர்க்கிறதோ இல்லையோ கட்டிட மற்றும் கடின உழைப்பு செய்யும் தமிழர்கள் செய்கிறார்கள். எனக்கு தெரிந்து பலர் பாகிஸ்தானி, போன்ற தமிழுக்கு சம்மந்தமற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். இதற்கு காரணம் கடின உழைப்புக்காரர்களே. அவர்கள் இங்கே வந்து ஹிந்தி அரபி உருது மலையாளம் கற்பதற்க்குள் பக்கத்தில் வேலை செய்பவருக்கு தமிழை கற்று தருகின்றனர்.
கடின உழைப்புக்காரர்களின் மூலம் தமிழ் வளர்கிறது ஆனால் அலுவலம் இன்னும் சில மேல் பதவிகளில் இருப்பவர்கள் தமிழர்களிடம் கூட தமிழில் பேசாத கொடுமையும் நடக்கும்.. நான் சொல்வது அலுவலகத்தில் அல்ல வெளியில். கழுத்தில் டைகட்டியதும் தமிழை கழட்டிப் போடும் ஆட்கள் நிறையபேர் உலகம் முழுக்க உண்டு. ஆனால் அங்கெல்லாம் இத்தனை நெருக்கமாக தமிழர்கள் இல்லை. தமிழர்கள் நெருக்கமாகவும் இணைந்தும் செயல் படக்கூடிய நிலையும் இங்கே குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் சில பேர் அதையும் ஒரு ஒழுங்குபடுத்தி செய்வது பாராட்டுக்கு உரியது, இங்கே இருக்கும் தமிழர்கள் வெறும் பணத்துக்காக மட்டுமே வருவது கண்கூடு. அது இல்லாவிடில் இவ்வுலகில்லை என்பவர்கள் அதிகம்தான். சில நேரம் இங்கே தமிழர்கள் மட்டும்தான் மதுஅருந்துகிறார்கள் எனும் தோற்றம் ஏற்படுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல . சரி நான் சொல்ல வந்தது அதை இல்லை. தமிழ்,
ஆம் இந்த தமிழ் சங்கம் தனது உறுப்பினர்களின் தேர்வை எப்படி நடத்துகிறது? குறைந்த பட்ச தகுதி டை கட்டியிருக்கவேண்டும் அதிக பட்ச தகுதி கார் இருக்க வேண்டும். இதனால்தமிழுக்கு என்ன நன்மை. வேண்டுமானால் அவர்கள் வெளிச்ச வட்டத்தில் பிரகாசிக்க முடியும். துபாய். பஹ்ரைன், குவைத்,சவூதி போன்ற இடங்களிலும் இதே நிலை.
எனக்கு தெரிந்த எத்தனையோ சிந்தனைவாதிகள் சாதாரண வேலைகளில் இருக்கிறார்கள். அவர்களின் திறமையை வெளிக்கொனற இவர்கள் ஏதும் திட்டம் வைத்திருப்பதாய் தெரியவில்லை. தமிழர்களுக்கு ஒரு தனியான முகவரி கிடையாது இங்கே. அவர்களே நுழைவுச்சீட்டு அடித்து அவர்களே வாங்கிச்செல்லும் அவலம் உண்டிங்கே.
இதே கேரளத்தினர் தனியாக செய்தித்தாள் தொலைக்காட்சி, வானொலி, எல்லாம் உண்டு தேனீர் விடுதி உட்பட.
நம்மவர்கள் ஒரு சிறப்பு விருந்தினரை வரவழைத்து பட்டிமன்றம் போடும் பணத்தில் நல்ல பத்திரிகை ஆரம்பிக்கலாம்.




5 comments:

Anonymous said...

அட, எப்படி சார் இவ்வளவு சரியா சொல்லறீங்க. குவைத்திலும் இதே கதைதான். இங்கும் பல தமிழ் மக்களின் சங்கங்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு சங்கத்திலும் தமிழ் கடித்துக் குதறப்படுவது கண்கூடு. பாரதி கலை மன்றம் என்ற ஒன்று இருக்கிறது அதன் தலைவர் ஆங்கிலத்தில் அதுவும் உடைந்த ஆங்கிலத்தில் தான் பேசுவார். அதை தட்டிக் கேட்டால் அவருக்கு தமிழ் சரியாக வராதாம். அடுத்து குவைத் தமிழ் சங்கம் என்று ஒன்று, இதன் தலைவர் பேசும் தமிழை கேட்டால்...... அதன் செயலாளர் சமீபத்தில் வந்த சுகிசிவத்தை வரவேற்று பேசும்பொழுது சொன்னது: இப்பொழுது திரு சுகி சிவம் அவர்களுக்கு மலர் வளையம் வழங்கப்படும்.

மு. மேத்தா வந்து இந்த வேதனையை அனுபவித்து தலையிலடித்துக்கொண்டு போனார்.

இதைவிட பெரிய கூத்து கவிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கும்பல் செய்வது: இப்படி இருப்பவர்கள் சுமார் 30 பேர் இருக்கலாம். ஆரம்பத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் பாலைக்குயில்கள் என ஒரு சங்கம் ஆரம்பித்தனர். பிறகு அது உடைந்து வளைகுடா வானம்பாடிகள், பாலைக்குயில்கள் என இரண்டானது. பாலைக்குயில்களில் ஒரு ஆறேழு பேரும், வானம்பாடிகளில் சிலரும். தற்போது வானம்பாடிகள் உடைந்து இன்னொரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களில் உள்ளவர்கள் எத்தனை பேர் ஒழுங்காக கவிதை எழுதுகிறார்கள் என்று கேட்டால் ஏதோ ஒண்ணோ இரண்டோ தேறும். மீதி இருப்பவர்கள் எல்லாம் தாங்கள் எழுதுவது தான் கவிதை என்று எண்ணிக்கொள்வதும் அல்லாமல் கைக்காசை போட்டு அதை புத்தகமாகவும் வெளியிடுகிறார்கள். இந்த புத்தகத்தை எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

அடுத்து மிக முக்கியமாக நீங்கள் சொல்லும் தொலைக்காட்சி, இங்கேயும் அவர்கள் எடுக்கும் நிகழ்ச்சிகள் இதே கதைதான்.

இது தவிற தமிழ்நாடு முஸ்லிம்கள் தங்களுக்கென்று சங்கம் வைத்திருக்கின்றனர். இதிலும் இரண்டு மூன்று இருப்பதாக கேள்வி.

இதுவுமல்லாது தமிழ்நாடு இஞ்சினியர்கள் தனி சங்கம் வைத்திருக்கிறார்கள்.

இங்கு ஆங்கிலத்தில் தமிழ் பேசப்படுகிறது.

இப்படியாக நமது தமிழ் மிகவும் அழகாக வளர்ந்து வருகிறது.

Unknown said...

//அட எப்படி சார் இவ்வளவு கரக்டா சொல்றீங்க?// எல்லாம் அனுபவந்தான இங்க வந்து பாருங்க நித்தியஷீ க்கு இங்க இருந்து விருதுதராங்க ஆனா அவங்கள விட நல்லா பாடர எத்தனையோ பேர் இங்க இருக்காங்க அவங்கள கண்டுக்கறதில்லே

Anonymous said...

அட இன்னொண்ணெ மறந்துட்டேனே, தமிழ் கிறித்துவர்கள் சங்கங்களும் இருக்கின்றன.

எல்லா இடத்திலும் நீங்கள் சொல்வது போல ஊரிலிருந்து காசு கொடுத்து யாரையாவது வரவழைத்து அந்த சாக்கில் மேடையேறுவதும், பிரமுகருடன் புகைப்படம் எடுப்பதும்தான் அதிகமாக நடக்கிறது.

Anonymous said...

முழுதும் உடன்படவோ, இடர்படவோ முடியவில்லை. இந்தக்காலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் தமிழையும் திறமையையும் அறிந்தவர்களாக மட்டும் இருந்தால் வெளிச்சம் பெற இயலாது என்பது அரபகங்களில் மட்டுந்தானா? தமிழகமாகவே இருந்தாலும், வித்தகமாகவோ, பேரரசாகவோ வேறு சிலரையும் அறிந்து வைத்திருக்க வேண்டியதிருக்கிறது தான்.

அரபகத்தின் தமிழர் அமைப்புகளில் காணப்படும் ஆர்வம் பாராட்டத்தக்கதே. அவ்வகையில் சிலவற்றை நானறிவேன். 'நானா?' 'நீயா?' 'அரசியல்' அதிகமிருந்தாலும் புதியவர்களுக்கு பாதை காட்டுகிறார்கள், சில பொழுதிலேனும். சமூக உயர்நிலையில் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் எனில் கண்டிக்கத்தக்கதே. உனை அறிந்தோ தமிழை ஓதினோம் என்று இதையெல்லாம் உண்மையான படைப்பாளிகள் புறந்தள்ளிவிடுவார்கள்.

(நிற்க, ஒரு அன்புக்கோரிக்கை: உங்களுடைய இப்பதிவில் பத்துக்கும் மேல் எழுத்துப்பிழைகள். ஒரு எ.கா: கண்ணம் = கன்னம். திருத்திக்கொள்ளுங்களேன்:-)) )நன்றி!

Unknown said...

தவறுகளை சுட்டியமைக்கு நன்றி தாங்கள் தெரிவிப்பது போல தமிழ் நாட்டிலும் நடக்கத்தான் செய்கிறது. அனைத்து அமைப்புகளும் தமிழுக்கும் தமிழனுக்கும் வெளிச்சம் தருவதை விடுத்து தங்களுக்கு வெளிச்சம் போட்டுக்கொள்வதிலேயே குறியாய் இருப்பது வேதனை